LOGICAL FALLACIES = ஏரணப் போலிகள்
01 accent, fallacy of = அழுத்தப் போலி = accentus
“நண்பர்களை நாம்
புறங்கூறலாகாது" (பிறரைப் புறங்கூறலாம்!);
"நண்பர்களை
நாம் புறங்கூறலாகாது" (பிறர் புறங்கூறலாம்!);
"நண்பர்களை நாம் புறங்கூறலாகாது" (துன்புறுத்தலாம்!)
02 accident, fallacy of = தற்செயற் போலி
"நாம் வாங்கும் உணவை நாம் உண்கிறோம்; நாம் பச்சை இறைச்சி வாங்குகிறோம்; ஆகவே நாம் பச்சை இறைச்சி உண்கிறோம்!"
03 appeal to authority, fallacy of = விற்பன்னப் போலி = ad verecundiam
"கடவுள் உண்டு என்பதை ஐன்ஸ்டைன் கூட மறுக்கவில்லையே!"
04 appeal to consequences, fallacy of = விளைபயன் போலி = ad consequentiam
"நாங்கள் கடவுளை நம்பினால், அறநெறிகளை நம்புவோம். கடவுளை நம்பாவிட்டால், அறநெறிகளை நம்பமாட்டோம். ஆகவே நாங்கள் கடவுளை நம்ப வேண்டும்!"
05 appeal to emotions, fallacy of = உணர்ச்சி கிளர்த்தல் போலி = ad misericordiam
"நீங்கள் அடிமைகளாக மடிய விரும்பினால், என் எதிராளிக்கு வாக்களியுங்கள். சுதந்திரமாக வாழ விரும்பினால், எனக்கு வாக்களியுங்கள்..."
06 appeal to force fallacy of = வலுவுடைப் போலி = ad baculum
தந்தை:
எனது மகள் தனது பரீட்சையில் எவரையும் பார்த்து எழுதவில்லை.
ஆசிரியர்:
உங்கள் மகள் பார்த்தெழுதியதற்கு கண்கண்ட சாட்சி உண்டு.
தந்தை: அப்படியா? ஆசிரியர்களையும், சாட்சிகளையும் நான் பள்ளிக்கூடத்துக்கு வெளியே கவனித்துக் கொள்கிறேன்!
07 appeal to money, fallacy of = பணபலப்போலி = ad crumenam
"அவர் உழைப்பால் உயர்ந்தவர். பணபலம் படைத்தவர். ஆதலால் அவரே எமது தலைவராக வேண்டும்"
08 appeal to novelty, fallacy of = புதுமைப் போலி = ad novitatem
"இது எங்கள் புத்தம்புதிய திட்டம். ஆகவே உங்கள் வாழ்வு இனிமேல் வளம்பெறல் திண்ணம்..."
09 appeal to the people, fallacy of = பெரும்பான்மைப் போலி = ad numerum = ad populum
"75 விழுக்காட்டினர் மதுவிலக்கை எதிர்க்கிறர்கள். ஆகவே மதுவிலக்கு கூடாது!"
10 appeal to tradition, fallacy of = மரபுப்போலி / வழமைப்போலி = appeal to past practice = ad antiquitatem = consensus gentium
"மணமகன்
சீதனம், நன்கொடை வாங்கி மணம் புரிவதே சரி. எங்கள் தலைமுறை
அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. அது எங்கள் சமூக வழமை. நெடுங்கால முறைமை..."
11 all-or-nothing, fallacy of = திசைதிருப்பல் போலி = black-or-white / bifurcation / false dichotomy / false dilemma / excluded middle
"இனி இரண்டில் ஒன்றை நாங்கள் தெரிவுசெய்ய வேண்டும்: வரியை அதிகரிப்பதா? அல்லது உலக வங்கியிடம் நாட்டை அடைவு வைப்பதா?"
"நீங்கள் ஒன்றில் எங்களை ஆதரிப்பவர்கள், அன்றேல் எதிர்ப்பவர்கள்! நீங்களே முடிவு செய்யுங்கள்!"
12 anecdotal evidence, fallacy of = துணுக்குச்சான்றுப்
போலி
"புகைப்பதால் புற்றுநோய் உண்டாகும் என்கிறீர்களா? எனது மைத்துனருக்கு 75 வயது. அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாகப் புகைத்து வந்துள்ளார். என்றுமே அவர் நோய்வாய்ப்பட்டதில்லை..."
13 argument against the person, fallacy of = ஆளெதிர்ப்போலி ஆளை எதிரிகட்டும் போலி = ad hominem
"இவர் சைவ உணவில் சத்துக் குறைவு என்கிறார். இவர் ஓர் அசைவர். ஈவிரக்கமற்றவர். இறைச்சி வியாபாரம் புரிபவர். கள்ளக்கடத்தலுக்கு சிறைசென்றவர்..."
14 argument from silence, fallacy of = விளம்பாமைப் போலி = சான்றின்மைப் போல = argumentum ad silentium
“விளம்பப்படவில்லை, ஆகவே சான்றில்லை!”
15 distraction, fallacy of = விடைதவிர் போலி = avoiding the issue / avoiding the question / digression
ஊடகர்: "உங்கள் அரசு மனித உரிமைகளை மீறியுள்ளதாக குற்றஞ் சாட்டப்படுகிறதே!"
அமைச்சர்: "நாங்கள் மனிதாபிமானம் மிகுந்தவர்கள். மக்களுக்கு உணவு, உடை, உறையுள் கொடுத்துக் காப்பவர்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது எங்கள் கொள்கை..."
16 bald man, fallacy of = வழுக்கைப் போலி = தாடிப் போலி = கும்பிப் போலி = continuum = beard = heap = line drawing = sorites
"எனக்கு
வழுக்கை விழாது"
"ஏன்?"
"எனக்கு
ஒரு முடி உதிர்வதால், வழுக்கை ஆகுமா?"
"இல்லை"
"இரண்டு
முடி விழுவதால், வழுக்கை ஆகுமா?"
"இல்லை"
"மூன்று
முடி விழுவதால், வழுக்கை ஆகுமா?"
"இல்லை"
"அதாவது,
ஒவ்வொரு தடவையும் ஒரு முடி உதிர்வதால் எனக்கு வழுக்கை விழாது,
அப்படித்தானே?"
"ஆம்"
"ஆகவே
எனக்கு வழுக்கை விழாது!"
"?"
_________________________________________________________________________
"குறுணிகள்
சேர்ந்து கும்பி ஆவதில்லை"
"எப்படி?"
"ஒரு
குறுணி, கும்பி ஆகுமா?
"இல்லை"
"இரண்டு
குறுணி, கும்பி ஆகுமா?
"இல்லை"
"மூன்று
குறுணி, கும்பி ஆகுமா?
"இல்லை"
"அதாவது,
ஒவ்வொரு தடவையும் ஒரு குறுணி சேர்ந்து கும்பி ஆவதில்லை"
"ஆம்"
"ஆகவே
குறுணிகள் சேர்ந்து கும்பி ஆவதில்லை!"
"?"
_________________________________________________________________________
"இந்த
அரிசிக் கும்பியில் ஒரு குறுணியை அகற்றினால், அதன்பிறகும்
இது ஒரு
கும்பியாகத்தானே
இருக்கும்?"
"ஆம்,
ஒரு குறுணியால் அப்படி என்ன வேறுபாடு உண்டாக முடியும்? அதனைப்
பொருட்படுத்த
வேண்டியதில்லை"
"சரி,
இன்னொரு குறுணியை அகற்றினால், அதன்பிறகும் இது
ஒரு கும்பியா?"
"ஆம்,
நிச்சயமாக, அதன்பிறகும் இது ஒரு கும்பி தான்!
ஏன், இன்னொரு
குறுணியை, பிறகு இன்னொரு குறுணியை..."
"சரி,
அப்படி எல்லாம் அகற்றிய பிறகு, இப்பொழுது
ஒரேயொரு குறுணியே
எஞ்சியுள்ளது.
இந்த ஒரேயொரு குறுணி ஒரு கும்பி ஆகுமா?"
"இல்லை,
இந்த ஒரேயொரு குறுணி எப்படி ஒரு கும்பி ஆகும்?"
"ஒரேயொரு
குறுணியால் அப்படி என்ன வேறுபாடு உண்டாக முடியும் என்று
வினவினீர்களே!"
"...ம்..."
"இப்பொழுது
மட்டும் அதனைப் பொருட்படுத்துகிறீர்களே!"
"?"
[ஒரு கும்பியில் உள்ள குறுணிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க விதிகள் இல்லை என்பதை வைத்தே மேற்படி போலி முன்வைக்கப் படுகிறது. நாங்கள் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ளும் ஏரணப் படிமுறை, எங்களை மேற்படி முரண்பாட்டுக்கு இட்டுச் செல்கிறது. இங்கு ஒரு குறுணி ஒரு கும்பியும் ஆகிறது, ஆகாமலும் இருக்கிறது!]
17 bandwagon, fallacy of = கும்பல் போலி
ஊடக
விளம்பரம்:
மக்கள் மேன்மேலும் உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி
வருகிறார்கள்.
இதோ,
நீங்களும் ஒன்றை வாங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது!
[தனியே இந்த
விளம்பரத்தின் விளைவாக நீங்கள் ஓர் உடற்பயிற்சிக் கருவியை
வாங்குவீர்கள்
என்றால்,
அது கும்பல் போலியை நீங்கள் கைக்கொண்டதாகப்
பொருள்படும்]
18 begging the question, fallacy of = மெய்ப்பிக்க முன் மெய்யெனும் போலி = சுழல்நியாயப்போலி = circular reasoning = petitio principii
"குருவில்
பிழை பிடிப்பது பிழை"
"ஏன்?"
"குரு பிழை
விடமாட்டாரே!"
"?"
_________________________________________________________________________
"அவரே
தலைசிறந்த கலைஞர்"
"எப்படி?"
"அவரைவிடச்
சிறந்த கலைஞர் இல்லை"
"அப்படியா?"
"ஆம்"
"?"
"ஆகவே அவரே
தலைசிறந்த கலைஞர்"
"?"
19 beside the point, fallacy of = மற்றொன்று
விரித்தல் போலி
ஊடகர்:
உங்கள் ஆட்சியில் கொலைகள் பெருகியுள்ளனவே!
ஆளுநர்: எங்கள் ஆட்சியில் செல்வம்கொழிப்பது உங்கள் கண்ணில் படவில்லையா?
20 biased generalizing, fallacy of = பக்கம்சாய் பொதுமைப் போலி = biased sample = biased statistics = converse accident = hasty generalization = faulty generalization = loaded sample = prejudiced sample = unrepresentative sample
கட்சித்தொண்டர்:
அனைவரும் எங்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.
வழிப்போக்கர்:
அவர்களை எங்கே சந்தித்தீர்கள்?
கட்சித்தொண்டர்: எங்கள் கட்சி அலுவலகத்தில்!
21 cherry-picking, fallacy of = மூடிமறைப்பு போலி = incomplete evidence = suppressed evidence = cover-up
"தனியார் துப்பாக்கிப் பாவனையை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வேறு எத்தனையோ விடயங்களை பிரச்சனைகளாக்கிய அதே தரப்பினரே துப்பாக்கிப் பாவனையையும் பிரச்சனையாக்கி வருகிறார்கள். 20,000 காவல்துறையினர் 2 கோடி மக்களை முற்றுமுழுதாக காத்துநிற்பது எங்ஙனம்? எங்கள் தற்காப்புக்கு துப்பாக்கி வேண்டாமா? சுடுவது ஆட்களேயொழிய, துப்பாக்கிகள் அல்ல. கொலை, களவு, வன்புணர்ச்சி போன்ற குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் ஆட்களேயொழிய, துப்பாக்கிகள் அல்ல. சுட்டவர் இருக்க துப்பாக்கியை நோகக்கூடாது. ஒருவரை சுட்டுத்தான் கொல்லவேண்டும் என்பதில்லை. வெட்டியும், குத்தியும் கொல்லலாம். அதற்காக, கத்திப் பாவனையையும் தடைசெய்வதா...?"
[கொலைகளுள் பல துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளே என்பதும், கொலைப் படைக்கலங்களின் விற்பனையில் முதலிடம் பெறுவது துப்பாக்கியே என்பதும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வண்ணம் காவல்துறையினரின் தொகையை வேண்டியளவு பெருக்க வாய்ப்புண்டு என்பதும்... இங்கு மூடிமறைக்கப்பட்டுள்ளன]
22 clouding the issue, fallacy of = மறைதிரைப் போலி = திசைதிருப்பல் போலி = smokescreen = distraction
"கனம் நீதிபதி அவர்களே, எங்கள் இளம் அரச வழக்குத்தொடுநர் இந்த முதியவர்மீது திருட்டுக் குற்றச்சாட்டு சுமத்தியது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இந்த முதியவரை ஒருதடவை ஏறெடுத்துப் பாருங்கள்! இவருக்கு எழுபது வயது. பொல்லூன்றி நடப்பவர். பார்வை, கேள்வி குறைந்தவர். ஆதலால்தான் கண்ணாடி, செவிக்கருவி அணிந்திருக்கிறார். முதியவர் ஒரு தனிக்கட்டை. தானும் தன்பாடுமாக வசித்து வருகிறார். கோயில் குளங்களில் உண்டு, குடித்து, உறங்கி வருகிறார். அவருடைய வாழ்நாள் எண்ணப்பட்டு வருகிறது. முதியவர் பட்டம், பதவி கண்டவர் அல்லர். சம்பளம், கிம்பளம் பெற்றவர் அல்லர். ஆதலால்தான் கட்டணம் வாங்காமல் அவருக்காக நான் வாதாடுகிறேன்..."
23 common cause, fallacy of = பொது ஏதுப் போலி
நீதிபதி: "குற்றஞ்சாட்டப்பட்டவர் வன்புணர்ச்சியும் கொலையும் புரிந்ததாக இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிற்றின்ப வெளியீடுகள் வன்செயல்களுக்கு இட்டுச்செல்லும் என்பதற்கு இந்த வழக்கு சான்று பகர்கிறது."
[வன்புணர்ச்சி, கொலை இரண்டும் வன்செயல்கள் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில், வன்புணர்ச்சிக்கு சிற்றின்ப வெளியீடுகளை நீதிமன்றம் சாட்டியது தகும். எனினும் கொலைக்கு சிற்றின்ப வெளியீடுகளைச் சாட்டுவது தகாது]
24 complex question, fallacy of = முடிச்சுவினாப் போலி = சரட்டுவினாப் போலி = loaded question
"உன்
படைப்புத் திருட்டை நீ நிறுத்திவிட்டாயா?"
["ஆம்" என்று பதிலிறுத்தால், இதுவரை படைப்புத் திருட்டுப் புரிந்தவர் என்பதை ஒப்புக்கொள்வதாகும்! "இல்லை" என்று பதிலிறுத்தால், இன்னும் படைப்புத் திருட்டுப் புரிபவர் என்பதை ஒப்புக்கொள்வதாகும்!]
25 composition, fallacy of = தொகுப்புப் போலி
அணுக்களை
வெறும் கண்களால் பார்க்க முடியாது; மனிதர்கள் அணுக்களால்
ஆனவர்கள்; ஆதலால் மனிதர்களை வெறும் கண்களால் பார்க்க
முடியாது!
_________________________________________________________________________
மாலைதீவு ஒரு வறிய நாடு. ஆகவே மாலைதீவு வாசிகள் அனைவரும் ஏழைகள்!
26 confusing an explanation with an excuse, fallacy of = விளக்கமளித்தலை நியாயப்படுத்தலாகக் குழப்பியடிக்கும் போலி
பேச்சாளர்: படையினரின் காட்டுமிராண்டித்தனதுக்கான காரணங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் படிப்பறிவு குறைந்தவர்கள். மனித உரிமைகளை அறியாதவர்கள். சம்பளத்துக்காக படையில் சேர்ந்தவர்கள். அவர்கள் காட்டுமிராண்டிகளாகப் பிறந்தவர்கள் அல்ல, காட்டுமிராண்டிகளாக மாற்றப்பட்டவர்கள்..."
கூட்டத்தில் ஒருவர்: “தோழர்களே, படையினருக்காக வக்காலத்து வாங்கும் இந்தப் பேச்சாளரின் கல்நெஞ்சை கண்டுகொண்ட பின்னரும் ஏன் பொறுமை காக்கிறீர்கள்?”
27 converse accident, fallacy of = விதிவிலக்குகளைப் பொதுவிதியாக்கும் போலி = reverse accident = hasty generalization = jumping to conclusions == a dicto secundum quid ad dictum simpliciter
"அவசரசேவை ஊர்திகள் தெருவிதிகளை மீறலாம். ஆகவே எல்லா ஊர்திகளும் தெருவிதிகளை மீறலாம்"
28 denying the antecedent, fallacy of = முன்னிலைவரத்தை
மறுக்கும் போலி
"நான் கோலாலம்பூரில் இருக்கிறேன் என்றால், மலேசியாவில் இருக்கிறேன். நான் கோலாலம்பூரில் இல்லை. ஆகவே நான் மலேசியாவில இல்லை!"
29 slippery slope, fallacy of = வழுக்குச்சரிவுப் போலி = domino
"நீ அவர்களுடன் கூடித்திரிந்தால், பொய்யர்களுடன் கூடித்திரிவாய். நீ பொய்யர்களுடன் கூடித்திரிந்தால், கள்வர்களுடன் கூடித்திரிவாய். நீ கள்வர்களுடன் கூடித்திரிந்தால், கொள்ளையர்களுடன் கூடித்திரிவாய். நீ கொள்ளையர்களுடன் கூடித்திரிந்தால், கொலைஞர்களுடன் கூடித்திரிவாய்..."
30 gambler's fallacy = சூதாடிப் போலி
'தலையா, வாலா?' பார்ப்பதற்காக, தொடர்ந்து 20 தடவைகள் ஒரு நாணயத்தைச் சுண்டியபொழுது, அது தலைப்பக்கமாய் விழுந்தது என்று வைத்துக்கொள்வோம். அடுத்துச் சுண்டும்பொழுது அது வாற்பக்கமாய் விழும் வாய்ப்பு அதிகம் என்று கொள்வது சூதாடிப் போலியின் பாற்படும். ஏனெனில் ஒவ்வொரு சுண்டிலும் தலைக்கும் வாலுக்கும் 50க்கு 50 வாய்ப்பே உண்டு. அதாவது ஒவ்வொரு சுண்டும் தனிப்பட்டது. ஒரு சுண்டுக்கும் மறு சுண்டுக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை.
31 genetic fallacy = தோற்றுவாய்ப் போலி
"சாதியம் சிறந்தது. ஏனெனில் எங்கள் சமயம் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. எங்கள் முன்னோர் அதனை ஏற்றுக்கொண்டார்கள். எங்கள் குடும்பம் அதை ஏற்றுக்கொண்டுள்ளது. எங்கள் அயலும் சுற்றமும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளன..."
32 guilt by association, fallacy of = அணிசேர்த்துக்
குற்றஞ்சுமத்தும் போலி
ஒருவர்:
மக்களாட்சியே தலைசிறந்தது
மற்றவர்:
இற்லரும்,
முசோலினியும் கூட மக்களாட்சி மூலம் ஆட்சிக்கு வந்தவர்களே!
[இற்லரும், முசோலினியும் மக்களாட்சி மூலம் ஆட்சிக்கு வந்தவர்களே என்பதை மாத்திரம் கொண்டு, மக்களாட்சியே தலைசிறந்தது என்னும் வாதத்தை பொய்ப்பிக்க முடியாது]
33 ignorance, fallacy of = அறியப்படாமை போலி = ad ignorantiam
"கடவுள் இல்லை என்பது எண்பிக்கப்படவில்லை. ஆகவே கடவுள் உண்டு!"
"கடவுள் உண்டு என்பது எண்பிக்கப்படவில்லை. ஆகவே கடவுள் இல்லை!"
34 illicit major, fallacy of = கள்ளப்
பெருமுன்னீட்டுப் போலி
1 தமிழகத்தோர்
அனைவரும் இந்தியர்;
2 கேரளத்தோர்
எவரும் தமிழகத்தோர் அல்லர்;
3 ஆகவே
கேரளத்தோர் எவரும் இந்தியர் அல்லர்!
[முதல் வரியில், அதாவது பெரு முன்னீட்டில் உள்ள "இந்தியர்" தமிழகத்தோரை மட்டும் குறிப்பது. மூன்றாம் வரியில், அதாவது முடிபில் உள்ள "இந்தியர்" முழு இந்தியரையும் குறிப்பது. அதாவது பெருமுன்னீட்டில் தமிழகத்தோரை மட்டும் குறிக்கும் "இந்தியர்" முடிபில் முழு இந்தியரையும் குறிக்கும் “இந்தியரை” குழப்பியடித்தபடியால், "கேரளத்தோர் எவரும் இந்தியர் அல்லர் என்றாகிறது! ஆதலால்தான் பெருமுன்னீடு, கள்ளப் பெருமுன்னீடு எனப்படுகிறது]
35 naturalistic fallacy = இயற்பண்புப் போலி
"பெண்கள் தலைமுறை தலைமுறையாக சமையலில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். ஆகவே பெண்கள் தொடர்ந்தும் தலைமுறை தலைமுறையாக சமையலில் ஈடுபட்டு வரவேண்டும்!"
36 non sequitur, fallacy of = பெறப்படா முடிபுவாதப் போலி = பொருந்தா முடிபுவாதப் போலி = it does not follow
"இன்று காலை நான் குளித்தேன்; ஆகவே இன்று மாலை மழை பெய்யும்!"
37 obscurum per obscurius, fallacy of = தெளிவுகுன்றியதை மேலும் தெளிவுகுன்றச் செய்யும் போலி = An argument or proposition expressed in terms which are even less clear than the original.
"மெய்யியல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். விவரங்களை அறிவியல்பகுத்தாராய்வது போல், விழுமியங்களை அறவியல் பகுத்தாராய்வது போல், கருதுபொருள்களை மெய்யியல் பகுத்தாராய்கிறது. ஒரு சொல்லின் கருத்து வேறு, ஒருவரின் உள்ளக்கருத்து வேறு. கருதுபொருள் என்பது கருதப்படும் பொருளைக் குறிக்கிறது. அத்தகைய கருது பொருள்களையே மெய்யியல் பகுத்தாராய்கிறது. எனினும் மெய்யியலில் 90 விழுக்காடு வெறும் பசப்புரையே என்று மாபெரும் மெய்யியலாளர் பேட்ராண் றசல் குறிப்பிடுள்ளார். எஞ்சிய 10 விழுக்காடு ஏரணவியலின் பாற்பட்டது என்பது அவர் துணிபு. அந்த வகையில் மெய்யியலில் 90 விழுக்காடு பசப்புரை ஆகிறது. அதாவது மெய்யியலில் 10 விழுக்காடு மெய், 90 விழுக்காடு பொய்..."
38 oversimplification, fallacy of = மலினப்படுத்தல்
போலி
"அன்பார்ந்த மக்களே, மீண்டும் ஒரு தேர்தலை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.அதிகாரப் பரவலாக்கம் கோரி எதிர்க்கட்சி பரப்புரை புரிந்து வருகிறது. நாட்டைப் பிரிப்பதே எதிர்க்கட்சியின் உள்நோக்கம். இது ஒரே நாட்டுக்கான தேர்தலா, இரு நாடுகளுக்கான தேர்தலா? நீங்கள் நாட்டுப்பற்றாளர்களுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா, நாட்டுத் துரோகிகளுக்கு வாக்களிக்கப் போகிறீர்களா?"
39 pathetic fallacy = தற்குறிப்பேற்றப் போலி = anthropomorphism
* "நேய நிலவு"
* "கொடிய வெயில்"
* "நிலவும் மலரும் குலவக் கண்டேன்"
40 persuasive definition, fallacy of = இணங்கத்தூண்டும் வரையறைப் போலி = poisoning the well
"பஞ்சமாபாதகங்களை அஞ்சாமல் செய்பவர்களுக்கும் மனித உரிமைகள் உண்டு என்று கூறிக்கொண்டு, அத்தகைய மனித உரிமைகளுக்காக வாதாட முன்வந்திருக்கும் திரு. முனியாண்டியின் உள்ளக்கிடக்கையை இனி நாங்கள் செவிமடுப்போம்?"
41 proof surrogate, fallacy of = கள்ளச்சான்றுப்
போலி
"நாங்களும் நீங்களும் நாட்டுப்பற்றாளர்கள் என்பதில் ஐயமில்லை. ஆகவே நாட்டுபற்று மிகுந்த எங்கள் கட்சிக்கே நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று உங்களிடம் நான் கேட்கவேண்டிய தேவையே இல்லை...!"
42 prosecutor's fallacy = வழக்குத்தொடுநர் போலி
ஒரு
கொள்ளையில் ஒருவர் கொலையுண்டார். புலன்விசாரணையின் பொழுது அங்கு யாரோ ஒருவரின்
தலைமுடி கண்டெடுக்கப்பட்டது. அவர்மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. தடயவியல்
நிபுணர் தனது சாட்சியத்தில், அத்தகைய ஒரு தலைமுடி பொருந்தும்
வாய்ப்பு 2000க்கு 1 என்று
தெரிவித்தார்.அதன் அடிப்படையில், குற்றஞ்சாட்டப் பட்டவர்
நிரபராதியாக விளங்கும் வாய்ப்பு 2000க்கு 1 என்று வழக்குத்தொடுநர் வாதிட்டார்.
[குற்றஞ்சாட்டப்பட்டவர் போல் 60 இலட்சம் பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன்படி பார்த்தால், இங்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் 3000 பேருள் ஒருவராக மாறுகிறார். அதாவது அவர் குற்றவாளியாக விளங்கும் வாய்ப்பு குறைகிறது, நிரபராதியாக விளங்கும் வாய்ப்பு கூடுகிறது. எனவே குற்றஞ்சாட்டப்பட்டவர் நிரபராதியாக விளங்கும் வாய்ப்பு 2000க்கு 1 என்று வழக்குத்தொடுநர் முன்வைத்த வாதம் வலுவிழக்கிறது]
43 quantifier shift, fallacy of = கணியம்பெயர்
போலி
அனைத்துக்கும் ஒரு காரணம் உண்டு. ஆகவே அனைத்துக்கும் ஒரே காரணமே உண்டு [இங்கு ஒரு என்னும் கணியம் ஒரே என்னும் கணியமாகப் பெயர்ந்துள்ளது]
அனைவரும் ஒருவரை நேசிக்கிறார்கள். ஆகவே அனைவரும் ஒருவரையே நேசிக்கிறார்கள் [இங்கு ஒருவரை என்னும் கணியம் ஒருவரையே என்னும் கணியமாகப் பெயர்ந்துள்ளது]
44 rationalization, fallacy of = நியாயம்
கற்பித்தல் போலி
ஒருவர்: உங்கள் தலைமுடி பழுப்பு நிறமாகத் தெரிகிறதே! என்ன சாயம் வாங்கிப் பூசினீர்கள்?
மற்றவர்:
மலிவான சாயத்தை வாங்கிப் பூசினேன்.
[தரம்குறைந்த சாயம் வாங்கிய செயலுக்கு மலிவான சாயம் வாங்கியதாக நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது]
45 reversing causation, fallacy of = முன்னிகழ்வின் பின்விளைவுப் போலி = after this, therefore because of this / cum hoc / ergo propter hoc / false cause / non causa pro causa / post hoc / regression / reversing causation
"காலைதோறும் நான் கூவுவது காதில் விழுந்துதானே கதிரவன் விழித்தெழுகிறான்!" – ஈசாப்பின் கதையில் ஒரு சேவல்
46 special pleading, fallacy of = சிறப்புரிமைப்போலி
"சட்டத்தின் முன் யாவரும் சரிநிகர் என்பதை நான் தயக்கமின்றி ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, என் மகனை நானே காவல் துறையிடம் பிடித்துக்கொடுப்பதா?"
"பழங்குடிமக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நீதி அமைச்சர் அமைதியாகவும், நிதானமாகவும் செவிமடுத்தார். சுருக்கமாகவும், விளக்கமாகவும் மறுத்துரைத்தார். மாலையோ பொன்னாடையோ ஏற்க மறுத்தார். கைதட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். வெண்கலக் குரலில் வினாக்களுக்கு அறுத்துரைத்து விடையளித்தார்..."
48 subjectivist fallacy = அகவயப்போலி
"புகைப்பதால் புற்றுநோய் உண்டாகும் என்று சொல்வதற் கில்லை. நான் அரை நூற்றாண்டுக்கு மேலாக புகைத்து வருகிறேன். எனக்கு புற்றுநோய் உண்டாகவில்லையே!"
49 tokenism, fallacy of = அடையாளப் போலி
"எங்கள் ஆட்சியை பேரினவாத ஆட்சி என்று கண்டிக்க முடியாது. அதற்கு எண்ணிறந்த ஆதாரங்கள் இருக்கின்றன. எடுத்துக்கட்டாக, எங்கள் கால்நடை அமைச்சர் ஒரு சிறுபான்மை இனத்தவர்..."
50 straw man fallacy = பூச்சாண்டிப்போலி
"மரண தண்டனையை எதிர்ப்பவர்களிடம் நான் கேட்கிறேன்: எங்களைக் காக்கும் காவல்துறையினரின் உயிரைவிடக் கொலைகாரர்களின் உயிர் மேம்பட்டதா?"
[எவருமே இறப்புத் தண்டனைக்கு உள்ளாகக் கூடாது என்பதே அதனை எதிர்ப்பவர்களின் நிலைப்பாடு என்பது வெளிப்படை. எனினும் அவர்கள் காவல்துறையினரின் பக்கம் சாராது கொலைகாரர்களின் பக்கம் சாய்வதாக இங்கு பூச்சாண்டி காட்டப்பட்டுள்ளது!]
51 tu quoque, fallacy of = 'நீயும்' போலி = you too fallacy
யாழி: உன்
வழக்கில் நீ பொய்ச் சாட்சியம் அளித்தாயே!
மீனி: உன்
வழக்கில் நீயும் பொய்ச் சாட்சியம் அளித்தாயே!
[மீனியின் பதில் குற்றச்சாட்டின் மூலம் யாழியின் முதல் குற்றச்சாட்டை மறுதலிக்க முடியாது]
52 undistributed middle, fallacy of = இனஞ்சாரா
நடுப்பதப் போலி
1 எல்லா
மாணவிகளிடமும் ஒரு கைப்பை உண்டு;
2 எனது
பாட்டியிடம் ஒரு கைப்பை உண்டு;
3 ஆகவே எனது பாட்டி
ஒரு மாணவி!
[முதலிரு கூற்றுகளிலும் இடம்பெறும் "கைப்பை"யே நடுப்பதம். எனினும் முதல் கூற்றில் இடம்பெறும் "கைப்பை"யோ, இரண்டாவது கூற்றில் இடம்பெறும் "கைப்பை"யோ எல்லாக் கைப்பையாளர்களையும் சார்ந்ததல்ல – கைப்பையாளர்கள் என்னும் இனம் முழுவதையும் சார்ந்ததல்ல. எனவே கைப்பை வைத்திருப்பதால் மட்டும் மாணவி பாட்டியாகவோ, பாட்டி மாணவியாகவோ மாற முடியாது]
53 weasel words, fallacy of = மழுப்புச்சொற்
போலி
எ-கா:
* விலையேற்றத்தை "விலைமாற்றம்" எனல்
* ஆட்குறைப்பை "மறுசீரமைப்பு" எனல்
* "... ஆய்வுகளின்படி..."
* "... என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர்."
No comments:
Post a Comment